Description
وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ
“இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் தன் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.”(அல்குர்ஆன் 22:11)
‘அலா ஹர்ஃபின்’ என்ற வார்த்தைக்கு, எழுத்துக்களில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வணங்குபவர் என்ற பொருளும் உண்டு. அவ்வாறெனில் மேலே குறிப்பிடும் வசனத்தின் இன்னொரு விளக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அதாவது இவ்வுலக நலனையும், மறுமை வெற்றியையும் இழக்கும் வகையில் மார்க்கத்தை வெறுமனே எழுத்துக்களின் மூலம் வாசிப்பவர்களின் நிலையை குர்ஆன் விமர்சிக்கிறது. ஆன்மாவை இழந்துவிட்ட வடிவம், அர்த்தமில்லாத ராகங்கள், சிந்தனையில்லாத எழுத்துக்கள் இவை தான் இன்று இஸ்லாத்தின் பெயரால் சமூகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
-நூலிலிருந்து
Syed Shamsudeen –
எழுத்திலிருந்து சிந்தனையை நோக்கி…
“இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் தன் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.” (அல்குர்ஆன் 22:11)
ஆரம்பக்கட்டத்தில் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் அதன் உள்ளார்ந்த பொருள் மற்றும் மனிதகுல விழுமியங்களால் ஈர்க்கப்பட்டு அவை நிலைநாட்டப்பட உயிரைக் கூட தியாகம் செய்யத் தயாராக இருந்தார்கள்.
பிற்காலத்தில் இஸ்லாம் வேகமாக பரவி ஏராளமானோர் இஸ்லாத்தைத் தழுவியபோது சிலரிடமிருந்து பழைய விழுமிய உணர்வும், தியாக மன நிலையும் காணாமல் போயின. அவர்கள் இஸ்லாத்தின் செயல்பாடுகளின் உள்ளார்ந்த பொருளைக் கவனிக்காமல் பெயரளவில் இஸ்லாத்தை கடைப்பிடித்தனர்.
இஸ்லாத்தின் வெற்றிகளில் மகிழ்ச்சியடைந்தவர்கள், இழப்புகள் ஏற்படும்போது விலகிச் சென்றனர்.பொருளாதார இழப்புகளும், உடல் ரீதியான சிரமங்களும் அவர்களை அதிருப்தியடையச் செய்தன. இதன் காரணமாக இஸ்லாம் இவ்வுலகில் வழங்கும் திருப்திகரமான வாழ்வும், மறுமையில் வழங்கப்படும் நிலையான சமாதானமும் அவர்களுக்கு அன்னியமாகின.
இவ்வசனத்தில் ‘அலா ஹர்ஃபின்’ என்ற வார்த்தைக்கு, எழுத்துக்களில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வணங்குபவர் என்ற பொருளும் உண்டு. அவ்வாறெனில் மேலே குறிப்பிடும் வசனத்தின் இன்னொரு விளக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அதாவது இவ்வுலக நலனையும், மறுமை வெற்றியையும் இழக்கும் வகையில் மார்க்கத்தை வெறுமனே எழுத்துக்களின் மூலம் வாசிப்பவர்களின் நிலையைக் குர்ஆன் விமர்சிக்கிறது.
ஆன்மாவை இழந்துவிட்ட வடிவம், அர்த்தமில்லாத ராகங்கள், சிந்தனையில்லாத எழுத்துக்கள் இவை தான் இன்று இஸ்லாத்தின் பெயரால் சமூகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
மார்க்கத்தின் பெயரால் இரண்டு வகையான எழுத்து வாசிப்புக்களை இன்று காண்கிறோம். முதலாவதாக அடிப்படையான ஆதாரங்களைப் புறக்கணித்துவிட்டு ஃபிக்ஹ் அறிஞர்களின் கருத்துக்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது. இன்னொன்று குர்ஆன், ஹதீஸ் வசனங்களின், அவற்றிலேயே வெளிப்படையாகச் சுட்டிக்காட்டப்படும் மனித குல விழுமியங்களையும், உத்தேச லட்சியங்களையும் புறக்கணித்துவிட்டு புற ரீதியான அர்த்தங்களை மட்டுமே பின்பற்றுவது. இதன் மூலம் இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படை லட்சியங்களான மார்க்கம், வாழ்வு, செல்வம், சுயமரியாதை, கண்ணியம், சமூகம் ஆகியவற்றின் பாதுகாப்பும், முன்னேற்றமும் இழப்புக்கு ஆளாகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘பிற்காலத்தில் எனது உம்மத்தில் கருத்து வேறுபாடுகளும், பிரிவினையும் ஏற்படும். ஒரு கூட்டத்தினர் அழகான வார்த்தைகளுடன் வருவார்கள், ஆனால் அவர்களின் செயல்கள் தீயவையாக இருக்கும். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழியை விட்டு கீழே இறங்காது. அவர்கள் வில்லிலிருந்து அம்பு பாய்ந்து செல்வதைப் போல மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். அவர்கள் படைப்பில் மிகவும் மோசமானவர்கள்.” (நூல்: அபூதாவூத்)
ஏ. சயீத், (எறும்புகள் சொல்லும் செய்தி எனும் நூலில்)